RSS

Monthly Archives: August 2011

நான் நல்லவள் ஆகிட்டேனோ?

 சமீப காலமா எனக்கு ஒண்ணும் பிரச்சனைகள் இல்லை. அதாவது எனக்கு சொந்தமா ஒண்ணும் பிரச்சனைகள் இல்லை. அடுத்தவங்க பிரெச்சனை தான் என் பிரெச்சனை ஆயிடுத்து. இதில எனக்கு என்ன பிரச்சனைன்னா அவங்க பிரச்சனையை என்னன்னு கூட நான் கேக்கறது இல்லை. ஆனா அவங்களாவே வந்து அவங்க கதைய என் கிட்ட கொட்டறாங்க பாருங்க அது தான்.

ஆபிசில் நான் தேமேன்னு என் கணினியில் ஆனந்த விகடன் படிச்சுட்டு இருப்பேன். “ஹாய் ஹொவ் ஆர் யு? ” அப்டீன்னு பின்னலேர்ந்து சத்தம் வரும். ஓ நாம இங்க ஒக்காந்து தெய்வத்திருமகள்ள விக்ரம் எப்டி எல்லாம் ஷான் பென்னை காப்பி அடிச்சி இருக்காருன்னு விகடன் விமரசினதுக்கு வந்திருக்கும் இணைய பின்னூட்டத்தை படிச்சு நேரத்தை வீண் அடிக்கறோமே. வெள்ளை காரி ப்ராசெஸ் மாப் கொண்டு வந்து டவுட் கேக்கறா பாத்தியா நு கொஞ்சம் வருத்தப் படுவேன். ஆனா டவுட் எல்லாம் ஒரு ரெண்டு நிமிஷம் தான். அப்பறம் தானா அவங்க கதை , அவங்க அம்மா வோட பாய் பிரெண்ட் கதைன்னு நான் சுதாரிக்கர்த்துக்கு முன்னாடி எங்கெங்கயோ போயிருக்கும் டாபிக். பல சமயம் நான் “ஆ எப்புடி எங்கேர்ந்து இந்த பேச்சு வந்தது “ன்னு மனசுக்குள்ளயே ஒரு பின்னோட்டம் போய் வருவேன். அதுக்குள்ளே நான் இன்னும் கூர்ந்து கவனிக்கிறேன்னு நெனச்சு இன்னும் கொஞ்சம் வேற எதோ விஷயத்துக்கு தாவி இருப்பாங்க. சாமி! கண்ணக் கட்டுதே ன்னு ஒரு மாதிரி “கவலை படாதீங்க எல்லாம் சரி யாயிடும்னு ” குத்து மதிப்பா சொல்லி வெப்பேன். “சரி நான் வரேங்க. நான் சொன்னது நமக்குள்ளேயே இருக்கட்டும் ” அப்டீன்னு வேற குண்ட தூக்கி போட்டுட்டு போயிடுவாங்க.

இந்த மாதிரி ரெண்டு மூணு தரம் நடந்த உடனேயே நான் வீட்ல புருஷன் கிட்ட சொன்னேன். “என்னன்னே தெரில. கொஞ்ச நாளா ரொம்ப மக்கள் அவுங்க பீலிங்க்ச எல்லாம் அவுத்து விடறாங்க” நு. “என்ன என்ன? கொஞ்சம் சொல்லேன்” அப்டீன்னு அவன் வேற வம்பு கேக்கறான். அதனால அவங்க கிட்ட “ச்சே ச்சே நான் போய் யார் கிட்ட சொல்ல போறேன்னு ” சொன்ன பீலாவ அப்டியே மூட்டை கட்டிவிட்டு கதையெல்லாம் சொல்லவென்.

ஆனா அடி மனசுல எனக்கு என்னவோ ஏன் திடீர்னு அடுத்தவங்க என் கிட்ட வந்து அவங்க வண்டவாளங்களை சொல்லணும்னு ஒரு காரணம் தேடிக்கிட்டே இருந்தேன்.

நான் சின்ன வயசுலேர்ந்தே கொஞ்சம் விட்டேத்தி. அடுத்தவங்களோட சோகம் எல்லாம் எனக்கு பாவமாவே தெரியாது. “அட ச்சே லூசா நீ? அவன் தான் போன் பண்ணலைன்ன அதுக்கு நீயேன் இவ்ளோ வருத்தப் படறே? அவன விட்ட வேற ஆளே இல்லையா” நு பிரெண்ட்ஸ்க்கு அட்வைஸ் பண்ணி அதுக்கு மேல அவங்க நான் வரேன்னாலே பேச்சை மாத்திடுவாங்க. என் சித்தப்பா பொண்ணுக்கு தான் இந்த மாதிரி அவங்க அவங்க மாட்டரை நைசா வாங்கி விஷயம் கரக்கறது எல்லாம் அத்துபடி. எனக்கு இஷ்டம்மும் கிடயாது அப்டி அடுத்த வங்க மேல ஒரு பச்சாதாபமும் கிடையாது.

புருஷன் கூட எப்ப பாத்தாலும் சண்டை போட்டுட்டு இருந்த ஒரு பொண்ணு அன்னிக்கும் “வா கபே போலாம்! லஞ்ச் சாபடலாம்னு ” கூப்பிட்டா . எனக்கு அப்பவே தெரியும் இன்னும் கொஞ்சம் இவ சோகத்த பிழியதான் என்னை கூப்படறான்னு. நாம பதிலே சொல்லாம இவ சொல்லறத மட்டும் கேட்டுட்டு வந்துடுவோம். நமக்கு இண்டரெஸ்ட் இல்லைன்னு இனிமே வர மாட்டான்னு ஒரு மாதிரி தக்காளி சூப்பின் சுவையை மட்டுமே முழுமுதல் கவனமா இருந்துட்டு மாடிக்கு வந்துட்டேன். 10 நிமிஷத்தில் ஆபீஸ் இன்ஸ்டன்ட் மெசெஞ்சரில் அவள் டைப் பண்ணுகிறாள். “உன் கிட்ட எனக்கு பிடிச்சதே இது தான். நீ நல்ல லிசினர்.” என்று. “ஆத்தாடி நான் நல்ல லிசினரா?” என் புருஷனுக்கு அப்படியே பார்வர்ட் பண்ணினேன். பாத்தியா என்னை எப்போ பாத்தாலும் சரியா கவனிக்கறது இல்லை, சும்மா எதோ ஜாலி உலகத்துல இருக்கேன்னு திட்டறியே! பார் பார். என்னை பத்தி எப்டி சொல்லி இருக்கான்னு.

ஆனா இந்த மாதிரி ஊமைக்கொட்டான் நடிப்பு தான் இவங்க எல்லாம் நம்ம கிட்ட கொட்டறதுக்கு காரணமா. சரி. நாளைக்கே வெக்கறேன் வெடின்னு மனசுல நெனச்சேன்!

அடுத்து வந்தா இன்னொருத்தி. தென் ஆப்பிரிக்காவுக்கு ஆபீஸ் செலவில் 4 நாள் போய் வந்தா. சும்மா போனோமா வேலை பாத்தொமான்னு என்ன மாதிரி டீசன்ட்டா இருக்கலாம் இல்லை. போன எடத்துல ஒரு ஆளோட அப்டி இப்டின்னு என்னென்னமோ. சரி இது தான் நாம திட்றதுக்கு ஏத்த தருணம்னு உள்ள புகுந்து “ஒனக்கு ஏன் இந்த வேலை. சும்மா இருந்து இருக்கலாம். சரி சரி எதோ ஒரு நாள்! அவனை மறந்திரு”ன்னு! அதிரடியா திட்டி அட்வைஸ் பண்ணினேன். கொஞ்சம் முகம் வாடி அந்த பொண்ணு போயிட்டா. “ஹப்பாடா ! இனிமே இவ வர மாட்டா !” ன்னு கொஞ்சம் திருப்தியா இருந்தேன். 20 நிமிஷத்துல எல்லாம் அந்த பொண்ணு திருப்பி வந்துட்டா. “ஆமா நீ சொல்றது தான் சரி. அவனை மறக்கணும். உன்னை மாதிரி நல்ல பிரெண்ட் இருக்கும் போது எனக்கு என்ன” அப்டீன்னு ஆரம்பிச்சு கிட்ட தட்ட ஒரு மணி நேரம் இதுக்கு முன்னாடி எல்லாம் எந்த எந்த ஊரில எந்த எந்த மாதிரி ஆளுங்கள அவ சந்திச்சு என்ன என்ன நடந்ததுன்னு ஒரு மினி “அவளுண்ட ராவுகள்” பார்த்த எபக்ட் கிரேயட் பண்ணிட்டா . நான் சற்றே ஆடிப்போய் விட்டேன். “இதெல்லாம் முன்னோட்டம் தான். இன்னூரு நாள் எனக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனா கதையை சொல்றேன்” ன்னா.

“ஐயையோ தாங்காதுடா சாமீ !” அப்போ திட்டினாலும் விமோசனம் இல்லை போல !

என் நெற்றியில “இங்கு கதை கேட்கப்படும் “ன்னு போர்ட் எழுதி ஒட்டியது போல இருக்கு எல்லார்க்கும். இன்ஸ்டன்ட் மெசெஞ்சர், பேஸ்புக் மெச்செஜ், போன், செல்லுனு திடீர்னு நான் ரொம்ப பிசியா ஆகிட்டேன். ஆகனி ஆண்டுன்னு ஆங்கிலத்தில் சொல்றது மாதிரி. “என்ன சொன்னாலும் நீ ஜட்ஜ்மேண்டலா இல்லை. அதனால என்னால உன்கிட்ட பேச முடியுதுன்னு” ஒத்தி சொன்னா! ஸ்ஸ்ஸ் ஹப்பா முடியல…

இனிமே “வேலை ஜாஸ்தியா இருக்கு”ன்னு சொல்லிடலாம்னு முடிவு பண்ணினேன். இந்த தரம் ஒரு கெழவி. முன்னாடி பல நாள் நான் அவங்க கூட எதோ ட்ரைனிங் எடுத்தேன். அதனால அவங்களுக்கு என்கிட்டே நல்ல பழக்கம். நடக்க முடியாத அளவுக்கு குண்டு. அவங்க நாற்காலி எங்க ஆபீஸ்ல தனியா ஆள் வெச்சு செஞ்சாங்க. கஷ்டப்பட்டு நடந்து வந்து தஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சு விட்டாங்க. சரி இவங்க நிஜம்மா ஆபீஸ் வேலை இருந்தா தான் இவ்ளோ முயற்சி பண்ணி வருவாங்க. இவங்களை துரத்தி விட முடியாதுன்னு நெனச்சேன். வந்தது வினை.

 வந்தது தான் வந்தோம் எல்லாத்தையும் பேசிடலாம்னு இருந்தாங்க போல. நாற்காலியில்லாம ரொம்ப நேரம் நிக்க கூட முடியாம ஒரு மாதிரி மேஜையையும் சுவற்றையும் பிடிச்சு சாய்ஞ்சு கிட்டே, அவங்க பொண்ணு, மாப்பிள்ளை, அவர் போலீஸ் உத்தியோகம், இவங்களோட பழைய புருஷன், இப்போத்தைய சைட்டு (அய்யோ ஆமாங்க! ) பேர பசங்கன்னு எனக்கு சம்பந்தமே இல்லாத சகலமும் இப்போ என் விஷயப் பெட்டியில் ! ஒரு முப்பது நிமிஷம் போக அவங்க சொன்னாங்க “நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்தியே! சும்மா யார் கிட்டயாவது பேசலாம் போல இருந்துது அதான் வந்தேன்னு.”

எதுக்காக எல்லாரும் என்கிட்டே அவங்க விஷயத்தை கொட்ட்றாங்கன்னு இப்போ புரிஞ்சு போச்சு. அந்த குண்டு கெழவி கடைசியா ஒண்ணு சொன்னாங்க. அதக்கேட்டுடு தான் வடிவேலு மாதிரி அழுதிட்டேன். அப்டியென்ன சொன்னாங்களா? “ரம்யா ! நீ ரொம்ப நல்லவ”ன்னு சொல்லிட்டாங்க மா !

அதான்.

 
6 Comments

Posted by on August 4, 2011 in Uncategorized