RSS

Daily Archives: May 26, 2011

அனுகூல சத்ரு

பல பேர உங்களுக்கு  தெரிஞ்சு இருக்கும். நல்லது செய்யறவங்க தான். ஆனா அவங்க செய்யற நல்லதுலேயே நாம ரணகளமா ஆகிடுவோம்.
 
எனக்கு எப்பவுமே பர பரன்னு வேலை செய்யணும். சும்மா இந்த மச மச எல்லாம் பிடிக்காது. டீ போட்டா கூட அடுப்பை ஹய்யில் வெச்சு தான் போடுவேன். ஆனா பாருங்க எல்லா வேலைலயும் அதே மாதிரி பர பரன்னு பண்ணினா எடுத்தேன் கவுத்தேன்னு ஆயிடும். இந்த ஞானம் சில சமயம் என்னைவிட என் புருஷனுக்கு கொஞ்சம் கம்மி. எப்போ பாத்தாலும் லாப்டாப்பும் மடியுமகவே உட்கார்ந்து இருப்பான். ஆனால் திடீருன்னு ஒரு வேகம் வந்துடும். கொஞ்சம் வேண்டாத வேளையில் ஐயோ போதும்பா போதும்நு நம்ப கெஞ்சி,  திட்டி பாத்தாலும் கேட்காத ஒரு சுறுசுறுப்பு வந்துடும்.
 
ஒரு நாள் வீட்டுக்கு யாரோ சாப்பிட வரும்முன் எல்லாம் செஞ்சு வெச்சிட்டேன். நான் போய் குளிச்சு டிரஸ் பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு போனேன். வந்து பாத்தா நான் சிங்க்கில் போட்டு வெச்ச கொஞ்சம் பாத்திரம் எல்லாம் டிஷ்  வாஷருக்குள் சமத்தாக இருந்தன. எலாரும் சாப்பிட அமர்ந்த வுடன் இட்லிக்கு புதினா  சட்னியை தேடி தேடி பார்கிறேன். “ஏம்பா நீ பாத்தியா? மிக்சி லேர்ந்து எடுக்கவே இல்லியே?” . “எனக்கு தெரியாது மா”. கொஞ்சம் தேடியதில் பார்த்தால் அப்படியே மொத்த சட்னியை குப்பையில் வழித்து போட்டு விட்டு மிக்சி டிஷ் வாஷருக்குள் சென்று விட்டிருந்தது. அவர்கள் போனவுடன் பெண்டு கழட்டி விட்டேன். “எனக்கு எப்படிம்மா தெரியும் நீ சட்னியை அப்படியே மிக்சீலியே வெப்பைன்னு?. ஒரு கப்புல போட்டு வெச்சிருந்தா தெரியும்” நு சால்ஜாப்பு ஒன்னு தான் கொறச்சல்.
 
அதாவது எனக்கு நல்லது பண்ணனும்னு தான் எண்ணம் எல்லாம். ஆனா பர பரன்னு வேலை பண்ணும் போது என்ன பண்ணறோம், எங்க சாமானை வெக்கறோம்னு நெனவு இருக்காது.
 
இதுக்கு நானும் கொஞ்சம் காரணமா இருக்கலாம்னாலும் அதை நான் ரொம்ப ஒத்துக்க மாட்டேன். வாரத்தில் 4 நாள் ஊருக்கு போயிட்டு அவன் வரும் போது சில சமயம் வீடு செம களேபரமா இருக்குமா , எனக்கோ சாமான் எடுத்து வெக்கறது எட்டிக்காய். வந்ததும் வராததுமா அவனே சிதறிக்கிடக்கும் ஆம்புலன்ஸ், தீ அணைப்பு வண்டிகள், போலீஸ் கார் ஜீப், இதர குப்பை லாரிகள், மோட்டார் பைக்கு, (எல்லாம் பய்யன் விளையாட்டு சாமான் தான்), 4 நாளுக்கு முன்னாள் காணாமல் போன கிரேயான் எல்லாவற்றையம் பத்தே நிமிஷத்தில் கிடு கிடுவென ஒதுக்கி விடுவான். நாமே செஞ்சு இருக்கலாம் பாவம்னு சைட்ல கொஞ்சம் தோணும். ஆனா இதுல பாதகம் என்னன்னா எந்த சாமான் எங்க வெச்சான்னு அவனுக்கே தெரியாது. மறு நாள் காலையில் தூங்கி எழுந்து வந்ததும் குழந்தை கன காரியமாக தான் அடுக்கி வைத்த ரேஸ் கார்கள் எங்கேனு பார்க்க வந்தால் எல்லாம் காணோம். “அம்மா, அப்பா ஊர்லேர்ந்து வந்தாச்சா?” அப்படின்னு 4 வயசு பையனுக்கு கூட அத்துப்படி இந்த கிளீன் அப் கபளீகர விவகாரம்.
 
காது தோடுகளை வீட்டின் எந்த மூலையில் வேண்டுமானாலும் கழட்டி வைக்கும் பொறுப்பற்ற குண்டல குமாரி நான். அவற்றில் பல இன்னமும் ஜோடியோடு இருப்பதற்கு என் கணவனே முழு முதல் காரணம் என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வேன். ஆனால் அவற்றை நான் கொண்டு வந்து டிராயரில் போட்டால் அதற்கு உரிய சின்ன பெட்டிகளில் போட்டு வைப்பேன். அதாவது, நான் சோம்பேறித்தனம் பார்க்காத அந்த 20 % வேளைகளில். மீதி நேரம் புருஷன் கொண்டு வந்து டிராயரை த்திறந்து அப்படியே போட்டு மூடிவிடுவான்.  “கண்ணா அந்த ரெட் அண்ட் வைட்  ஒரு தோடு காணோம்பா. நீ பாத்தியா? ” “ஐ டோன்ட் நோ ” “நான் கீழ கிரைண்டர் கிட்ட போன வாரம் கழட்டி வெச்சேன். இப்போ ஒன்னு மட்டும் இந்த ட்ராயர்ல இருக்கு. நீ தான் கொண்டு வந்திருப்ப . கொஞ்சம் நெக்ஸ்ட் டைம்லேர்ந்து இந்த பெட்டிக்குள்ள போட்டு வெச்சா பெட்டர். ” அவன் என்னை முறைப்பதற்குள் நான் அப்பீட் .
 
படிக்கும் உங்களுக்கு “ச்சே அவனால முடிஞ்சது செய்யறான். இதை கூட கொறை சொல்லறியேடி க்ராதகி” ன்னு தோணலாம். ஆனா தினமும் கஷ்டப்படற எனக்கு தானே தெரியும் அந்த கஷ்டம். 
 
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மணி அய்யரின் செல்லப்பெட்டியை நிமிஷத்துக்கு நிமிஷம் திரிபுர சுந்தரியின் பாட்டி லவட்டிக்கொண்டு போவது மாதிரி சாமான் எங்க வீட்டில் மாயமாய் மறைந்துவிடும். குழந்தைக்கு போட எடுத்து வைத்த சட்டை அடுத்த நிமிஷம் காணாமல் போய் இருக்கும். தேடி தேடி பார்த்தால் வாஷிங் மஷீனுக்குள் போட்டு விட்டு இருப்பான். வால்மார்ட் சாமான் லிஸ்ட் இங்க தானே வெச்சேன். பார்த்தால் குப்பை தொட்டியில். மாடியில் இருந்து துணிகளை கொண்டு வரும் போதே அந்த சிகப்பு டாப்பை கையால் தோய்க்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. “இங்க பார் இந்த டாப். நான் வரத்துக்குள்ள இதை மத்த துணியோட தோச்சுடாதே” னு நினைவாய் சொல்லணும். அப்படியே ரெண்டு நாள் மறந்து தோய்க்காமல் போனேனோ அடுத்த ரவுண்டு  துணிகளுடன் நிச்சயமாய் கரை படித்துக்கொண்டு இருக்கும். “நான் தான் சொன்னேனே”. “அது அன்னிக்கி, அதே டாப் தான் இதுன்னு எனக்கு எப்படி தெரியும்?”.
 
இந்த இளவேனில் காலத்தில் தான் தோட்டத்தில் செடிகளும் கூடவே களைகளும் வேக வேக மாக வளரும். அந்த களையை ஒன்று பிடுங்க வேண்டும், இல்லை, அதன் விதை முளைக்காமல் இருக்க மண் மீது மர ஸ்ராய்களை போட்டு அதற்கு வெளிச்சம் கிடைக்காமல் செய்ய வேண்டும். சென்ற வருடங்களில் என் புருஷனின் திடீர் கொலை வெறி சுறுசுறுப்பு இந்த களை களின் மேல் பாயும் அந்த நாள் எப்பவுமே ஏதாவது வில்லங்கத்தில் முடியும். போன வருஷம் நான் திரும்பி பார்பதற்குள் எல்லா மணத்தக்காளி செடிகளையும் வேரறுத்து விட்டான். அதனாலேயே தோட்ட வேலையை  கூடுமான வரை நானே சமாளித்துக்கொள்வேன். புல் வெட்டுவதை மட்டும் அவன் செய்து விடுவான். அனால் இந்த பாழாய்ப்போன கை வலி இந்த தரம் வேறு வழியின்றி செய்து விட்டது.
 
“இந்த நாலு கோஸ், நாலு காலி பிளவர், 2 செம்பருத்தி தவிர சுத்தி வளர்ந்து இருக்கற புல்லை புடுங்கிடு”. “நான் பிடுங்கின அப்பறம் கேக்காதே, இப்போவே பாத்துக்கோ ” “நான் அங்க தக்காளியும் வெண்டைக்காயும் நட்டுண்டு இருக்கேன். ஏதாவது செடி தெரிலைனா கொழந்தையை கேளு. அவன் சொல்லுவான் “. ஒரு பத்து நிமிஷம் நல்லா தான் போய்க்கொண்டு இருந்தது. குழந்தையும் நாயும் தோட்டத்தில் அவர்கள் பங்குக்கு ஆடிக்கொண்டு இருந்தார்கள். களை அகற்றி இருந்த இடத்தில் இரண்டு தர்பூஸ் செடிகளை நட்டு அழகு பார்த்தேன். பரவா இல்லைடா, 6 வாரமா வீட்டுக்குள்ளேயே சின்ன சின்ன பிளாஸ்டிக் தொட்டிகளில் நான் ஆரம்பித்த விதைகள் குட்டி செடிகளாக ஆயிடுத்து. கஷ்டப்பட்டு வளர்த்து ஒரு வழியா எல்லா செடியையும் வெளில நட்டுடோம் என்று கொஞ்சம் மகிழ்ந்தேன்.
 
அதானே பாத்தேன். அதற்குள் நான் அந்த பக்கம் நட்டிருந்த வெண்டைக்காய்கள் இரண்டைக் காணோம். “எனக்கு என்னம்மா தெரியும் அது வெண்டைக்காயா வேற எதுவானா?” “ஹா, அய்யோ “. அந்த புல் குப்பையில் தலை வேறு உடல் வேறாக கிடந்தன பிஞ்சு வெண்டை செடிகள். அதற்கு மனம் வருந்து வதற்குள் இந்த பக்கம் மரஸ்ராய்களை கணவன் கொட்டி கொண்டிருந்த   இடத்தில் தான் நான் தர்பூஸ்களை நட்டு இருந்தேன். அதில் ஒரு செடியை காணோம், “என்னப்பா நீ . எனக்கு ஹெல்பே வேண்டாம். நீ போ. ” சரி நான் வேலி கிட்ட போய் போடறேன். ” “ஐயோ அங்க நான் கிர்ணி பழமும் வெள்ளரிகாயும் நட்டு இருக்கேன். ” ” நீ ஏன் கண்ட எடத்துல நடர? ” ” நல்ல கதையா இருக்கே. செடிக்கு வேலி வேணுமே  படர….”
 
எப்படியோ நட்டத்தில் பாதியாவது தேறுமா தெரியலை. வெய்யில் தலைக்கு ஏற  ஆரம்பித்தது.  காலி பிளாஸ்டிக் தொட்டிகளை பொறுக்கி குழந்தை அடுக்கி விளையாடியது. “இந்த தொட்டி. எல்லாம் குப்பை தானா. இப்போவே கேட்டுக்கறேன் மா “. அமாம் ஆமாம். போட்டுடு. ஆனா, இந்த 5 தொட்டி பாரு. அதை மட்டும் போட்டுடாதே” என்றேன். அதில் போன வருஷம் செம்பருத்தி செடியில் அதிசயமாக வந்த விதைகளை சேகரித்து போட்டு அவை துளிர்த்து இருந்தன. ” நான் குழந்தைய கூட்டிண்டு உள்ள போறேன். நீயும் குப்பையை போட்டுட்டு வந்துடு. போதும் வேலை என்றேன். 
 
மறுநாள் செம்பருத்தி முளைகள் என்ன செய்கின்றன என்று பார்த்தால் குட்டி தொட்டிகள் மட்டும் அங்கே, காலியாகக் கிடந்தன. மண் செடி ஒண்ணும் இல்லாமல் தொட்டி மட்டும் சுத்தமாக!
 
ஊருக்கு சென்று விட்டிருந்தான் அனுகூல சத்ரு. “ஹலோ…” . “வாட் டிட் யு டூ டு தி செம்பருத்திஸ்? ” “நீ தொட்டிய தானே மா சொன்ன போடாதேன்னு. எனக்கு என்ன மா தெரியும் அந்த தொட்டிக்குள்ள் இருக்கற செடி வேணும்னு…..”
 
 “நீ வீட்டுக்கு வாடி, இருக்கு ஒனக்கு”.
 
1 Comment

Posted by on May 26, 2011 in Uncategorized